×

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பழநி கோயில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: 8ம் தேதி தேரோட்டம்

பழநி: பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன், பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நேற்று காலை 9.30 மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதரரான முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் உள்ளிட்ட வாத்தியங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலின் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி எடுத்து வரப்பட்டது. பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7ம் தேதி திருக்கல்யாணம், 8ம் தேதி மாலை 4.30 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெறும். 11ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கொடி இறக்கி விழா முடிவடைகிறது.
தங்கரத புறப்பாடு நிறுத்தம்: தைப்பூச திருவிழாவையொட்டி 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 11ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palani Temple ,flag celebration ,devotees ,Aurora ,Therottam ,pilgrims , Devotees, Arora Slogan, Palani Temple, Taipoosam Festival, Flag
× RELATED பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்